திருக்கோயில் அம்மனின் தோற்றம் வரலாறு

1998-ஆம் ஆண்டு மலர்விழி என்பவர் சென்னையில் வாழ்ந்து வந்த பொழுது அருள்வாக்கு கேட்பதற்காக ஒரு பெண்ணிடம் சென்றிருந்தார். அப்பெண் அருள்வாக்கு கூறும் பொழுது மலர்விழி அம்மாவிடம் “உன் மேல் ஒரு சக்தி இருக்கிறது. பிற்காலத்தில் வெளிப்படும், தென் மாவட்டம் சென்று விடுவாய்” என்று கூறியுள்ளார்.


அதன் பிறகு 1999-ஆம் ஆண்டு வாழ்க்கைச் சுழற்சியின் காரணமாக மலா்விழி அவர்கள் காரைக்குடியில் வந்து குடியேறக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. பின்பு 2002-ஆம் ஆண்டு ஆடி மாதம் வெள்ளிக்கிழமை இரவு மலர்விழி அவர்கள் சாமிக்குப் பூசை செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு காளியின் புகைப்படத்தில் தீபச் சுடரில் ஒரு பெண் குழந்தையின் முகம் தெரிந்தது. மலா்விழி அதைக்கண்டு பயந்து அலறி மற்றவர்களை அழைக்க, ஒரு வினாடியில் அம்முகம் மறைந்துவிட்டது. இதனால் மற்றவர்களால் பார்க்க இயலவில்லை. இது முதல் நிகழ்வு.


மலர்விழி அம்மையார் வருடம் தோறும் பழனி பாதயாத்திரை போகும் வழக்கம் கொண்டவர். ஆனால் திடீரென்று எட்டு வருடங்கள் பழனிக்குச் செல்ல இயலாமல் போனது. அதற்கு பிறகு 2002-ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமையில் அம்மையாரின் கனவில் பழனி பாதயாத்திரை குருசாமி உருவில் வேலவன் காட்சி தந்து “பழனிக்கு வா” என்று கனவில் கூறி மறைந்தார்.


பின்பு மறுநாள் காலை முதல் மலர்விழி அம்மையார்  பழனிக்குச் செல்ல விரதம் மேற்கொண்டார். பழனிக்குச் செல்லும் பொழுது, வழியில் நத்தம் சாலையில் உள்ள கருப்பர் கோயிலுக்கு அருகில் செல்லும் பொழுது முதன் முதலில் மலர்விழி அம்மையார் தெய்வத்தின் அருள் பெற்றார்.


அப்பொழுது அருகில் இருந்த குருசாமி மனைவியிடம், “என் பெயர் காமாட்சி, எனது ஊர் பர்மா என் தகப்பன் பெயர் கருப்பையா, தாய் உடையனாச்சி. நான் யாதவர் குலத்தில் பிறந்தவள். நான் அம்மை போட்டு இறையருள் பெற்று தெய்வமாக சோதியில் கலந்த இடத்தில் என் தலைமாட்டில் ஆலமரக்கன்று உள்ளது. பக்கத்தில் ஊரணி இருக்கிறது. நீ பர்மா வந்து பிடிமண் எடுத்து எனக்குக் கோயில் கட்ட வேண்டும். நான் மக்களின் துயரத்தைப்போக்க அவதாரம் எடுத்துள்ளேன். இரு உள்ளங்கையிலும் சக்கரத்தோடு பிறந்த நான் காமாட்சியின் அவதாரம். எல்லா மக்களின் குறைகளையும் போக்குவேன். எனக்குக் கோயில் கட்டித்திருவிழா நடக்கும். பால்குடம், முளைப்பாரி எடுப்பார்கள். ஊர் கூடி திருவிழா நடத்துவார்கள் என்றும், பதினேழு வருடம் குழந்தை இல்லாத அந்த குருசாமியின் மனைவிக்கு 2004-ஆம் ஆண்டு குழந்தை பிறக்கும்” என்றும் கூறினார்.


2003-ஆம் ஆண்டு சனவரி 14-ஆம் 6ததி இரவு வெள்விக்கிழமையன்று மலர்விழி அம்மையார் முதல் அருள்வாக்குக் கூறிணர்கள். அதன்படி அந்தப் பெண்ணுக்கு 2004-ஆம் ஆண்டு இரண்டு ஆண் குழந்தை பிறந்தது.


கனவில் கூறியபடியே மண் எடுப்பதற்காக மலர்விழி அவர்கள் பர்மா சென்றார். அப்பொழுது அங்கிருந்த பெரியவர்கள் காலச்சீற்றத்தால் அந்த இடங்கள் அழிந்து விட்டன என்று கூறிவிட்டனர். காமாட்சியம்மன் மலர்விழி அம்மையாரின்  மனதில் தோன்றி, 'வா-தொங்கு' என்ற கிராமத்திற்கு வரச் சொல்லி அழைத்தது. அம்மையாரும் அவ்வாறே சென்றார். வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது அவர் சென்ற வாகனத்தை “நிறுத்து, நான் அந்தத் திசையில் இல்லை,  நீ நிற்கும் இடத்திலிருந்து மேற்கு நோக்கி இருக்கிறேன். புத்தர் மடம் ஒன்று இருக்கிறது. அங்கே வந்துவிடு” என்று அம்மன் அறிவிக்க மலர்விழியும் அவ்வாறே அந்த இடத்திற்குச் சென்று நின்று கொண்டு, “அம்மா நீ எங்க இருக்க? என்னை வந்து கூட்டிக்கொண்டு போ” என்று கண்ணி விட்டு அழுதார். உடனே ஓர் குழந்தை வந்து மலர்விழியின் வலது கையைப் பிடித்தது போல இருந்ததும், மலர்விழி அவர்களுக்கு அருள்வந்து பேசும்தெய்வம் காமாட்சியம்மன் சோதியாக இருக்கும் இடத்திற்குச் சென்று விட்டார்.


அந்த இடத்தில் அம்மன் கூறியது போலவே பெரிய ஆலமரம் , ஊரணி இருந்தது. அங்கிருந்த தெய்வத்தை பர்மா மக்கள் அனைவரும் வழிபட்டு வருவதை அறிந்து கொண்டார். மலர்விழி அம்மையார் தான் கனவில் கண்டதை நேரில் பார்த்ததும் கதறி அழுதார். அதன் பிறகு அந்த இடத்திலிருந்து பிடிமண் எடுத்துக்கொண்டு திரும்பினார். அப்பொழுது மலர்விழி அவர்களின் உறவினர் மகன் ஒருவரும் அந்த மண்ணைச் சிறிதளவு எடுத்துக் கொண்டு வந்து விட்டார். இதனை யாரும் அறியவில்லை. வரும் வழியில், வாகனத்தை நிறுத்திய அவர் தன் உடம்பெல்லாம் அரிப்பதாகக் கூறினார். அனைவரும் வண்டியை விட்டு இறங்கினர். அனைவரும் வண்டியை விட்டு இறங்கினர். அப்பொழுது அவர் எடுத்து வைத்திருந்த மணல் முடிச்சைக் காணவில்லை. அந்நிலையில் அவர், “நானும் இந்த மணலை எடுத்து சிறு முடிச்சாகக் கட்டி வைத்திருந்தேன். என் வீட்டில் வைத்து வழிபடலாம் என்று... இப்பொழுது அதனைக் காணவில்லை. உண்மையில் இந்த அம்மன் சக்தி வாய்ந்த அம்மன் தான் ” என்று கூறி அழுதார். அந்த மணல் வெண்மை நிறத்தில் சீனி போன்று இருந்ததாகக் கூறப்படுகிறது.


பிறகு அவர்கள் அந்த மண்ணை எடுத்துக்கொண்டு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கும் அவர்களுக்குப் பல தடங்கல் ஏற்பட்டது. அம்மன் 'சிவப்புச்சட்டை அணிந்த ஒருவர் உனக்கு உதவி செய்வார். உடனே புறப்படு என அறிவுறுத்த அம்மையாரும் விமான நிலையத்துக்குச் சென்றார். அம்மன் கூறியது போலவே சிவப்புச் சட்டை அணிந்த ஒருவர் வந்து தன்னுடைய விமான பயணச் சீட்டுகளை அம்மையாருக்குத் தந்து உதவுகிறார். பிறகு அந்த மண்ணை மேளதாளத்தோடு கொண்டு வந்து பீடம் அமைத்து வழிபடத் தொடங்கினர்.


அதன்பிறகு ஒரு நாள் காமாட்சி அம்மன் மலர்விழி அவர்களின் கனவில் வந்து "நீ இருக்கும் இடத்திலிருந்து கிழக்குப் பகுதியில் ஒரு இடம் இருக்கிறது. வேப்பமரம் , மஞ்சனத்தி மரம் உள்ள இடத்தை வாங்கி கோயில் உருவாக்குவாய்.” என்று கூறியது. மறுநாள் அந்தப் பகுதியில் போய்த்  தேடிப்பார்த்த பொழுது, அதே போல் வேப்பமரம் , மஞ்சனத்தி மரம் ஆகியவற்றுடன் அந்த இடம் காட்சியளித்தது. அந்த இடம் தான் இப்பொழுது பேசும் தெய்வம் அன்னை ஸ்ரீ காமாட்சியின் திருத்தலம் ஆகும்.


தொடக்கத்தில் சூலத்தை மட்டும் வைத்து வழிபட்டு வந்தனர். பின்னர், கூரை வேய்ந்து குடிசை அமைத்தனர். அதன் பின்னர் மலர்விழி அம்மையாரின் பெரு முயற்சியாலும், பக்தர்களின் காணிக்கையாலும் இப்பொழுது இருக்கும் காமாட்சியம்மன் கோயில் கட்டப்பட்டது.



எழுதியவர்: கா சுபா